Published : 30 Sep 2021 05:51 PM
Last Updated : 30 Sep 2021 05:51 PM
ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடா, ட்விட்டரில் பகிர்ந்த ஒரே ஒரு புகைப்படத்தால் அனைவராலும் அறியப்படும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கரோனா பெருந்தொற்றைக் கையாணட விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.
இந்நிலையில், அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இதனையடுத்து, ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை நேற்று நடத்தியது.
இத்தேர்தலில், ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஃபுமியோ கிஷிடா அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமராக தேர்வான அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர அது வைரலாகி வருகிறது.
நேற்றைய இரவு உணவை கிஷிடா ஒரு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார். அத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்திருந்தார்.
அதில், நான் வீடு திரும்பியபோது எனது மனைவி எனக்காக எனக்கு ரொம்பவும் பிடித்த ஒகோனோமியாகி செய்து வைத்திருந்தார். எனக்கு அந்த உணவு மிகவும் பிடித்தமானது என்று அவருக்குத் தெரியும். அவர் செய்வது எப்போதுமே ருசியாகத் தான் இருக்கும். ஆனால், இன்று அது மிகவும் பிரமாதமாக இருந்தது. என் வாழ்நாளுக்கும் நான் இதை மறக்கமாட்டேன். நன்றி எனப் பதிவிட்டிருந்தார்.
帰宅すると、妻の裕子がお好み焼きを作ってくれていました。インスタライブで私が、「妻の作ってくれるお好み焼きが大好きです」と言っていたからです。
いつも最高に美味しいけど、今日は、一生忘れられない美味しさでした。ありがとう。 pic.twitter.com/vsBesywmCG
அந்த உணவைப் பற்றி எளிமையாகக் கூறவேண்டுமென்றால், அது முட்டைக்கோஸ் கொண்டு செய்யப்படும் பேன் கேக். முட்டைக்கோஸ், மாமிசம், மீன், மேலே சாஸ் எனக் கண்கவர் உணவு அது. கிஷிடாவின் சொந்தத் தொகுதியான ஹிரோஷிமாவில் இந்தவகை உணவு மிகவும் பிரபலம்.
ஜப்பானின் அடுத்த பிரதமராக தேர்வாகியிருந்தாலும் கூட கிஷிடா ஒன்றும் ட்விட்டரில் அவ்வளவு பிரபலமில்லை. அவருக்கு வெறும் 1,80,000 ஃபாலோவர்கள் மட்டுமே உள்ளனர். கிஷிடா இப்போதுதான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நுணுக்கமாகக் கற்றுக் கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT