Published : 29 Sep 2021 07:01 PM
Last Updated : 29 Sep 2021 07:01 PM
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள தலிபான் அரசை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம்பெற்றோரில் 15க்கும் மேற்பட்டோர் ஐ.நா.வால் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். இதனாலேயே சர்வதேச சமூகம் ஆப்கனின் தலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றன.
ஆனால், பாகிஸ்தான் மட்டுமே ஆப்கானிஸ்தானை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது என்று கூறிவந்தது. ஆப்கானிஸ்தானைப் புறக்கணித்தால் கடுமையான மனிதநேய நெருக்கடிகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிவந்தார்.
இந்நிலையில், இன்று பாகிஸ்தானின் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் ஒமர் அயூப் கான் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தான் அரசை ஆதரிப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை இன்னும் அங்கீகரிக்காத நிலையில் பாகிஸ்தான் மட்டும் தனித்து உதவிகளை செய்தால் தங்கள் நாட்டின் மீதும் பொருளாதாரத் தடைகள் நீளலாம் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
ஆப்கானிஸ்தனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடனேயே தலிபான் ஆட்சிக்கு அஞ்சி தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்துறை நிபுணர்களும் வெளியேறினர். குறிப்பாக நிதித்துறை வல்லுநர்களும் வெளியேறினர். இதனாலேயே அங்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக கணிக்கும் பாகிஸ்தான், தேவைப்பட்டால் வங்கி, நிதி மேலாண்மை போன்ற துறைகளில் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களுக்கு குறுகிய கால அடிப்படையில் பயிற்சிகளை அளிக்கலாம் என்றொரு யோசனையை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கி ஊழியர்களை பாகிஸ்தானுக்கு வரவழைத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் உதவியுடன் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை, பெண்கள் பணிபுரிய தடை என இன்னமும் பழைமைவாதத்திலேயே இருப்பதால் மேற்கத்திய நாடுகளின் தயக்கத்தைக் கூட்டுவதாக இருக்கிறது.
இந்தச் சூழலில் முழுமையாக தலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாகிஸ்தான் இருமனதுடன் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT