Published : 24 Sep 2021 04:18 PM
Last Updated : 24 Sep 2021 04:18 PM

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை புறக்கணிப்பது மனிதாபிமான சிக்கலை உருவாக்கும்: பாகிஸ்தான் 

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானைப் புறக்கணிப்பது மனிதாபிமான சிக்கலை உருவாக்கும் என பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்து கொண்டுள்ளார். ஐ.நா. வருடாந்திர கூட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தனி ப்ளின்கனை நேற்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிளின்கன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறிச் சென்றார். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசியாக நடைபெற்ற மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் உதவியதற்கு நன்றி என்றும் கூறினார்.

இதேபோல் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தனி பிளின்கனுடனான சந்திப்பில் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானை புறக்கணிக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானில் மனிதநேய பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில் உலக நாடுகள் தார்மீக பொறுப்புணர்வுடன் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும்.

தலிபான்களும் மனித உரிமைகளை மதித்து ஆட்சி நடத்துவோம் என்ற வாக்குறுதியைக் கடைபிடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தனித்துவிடும் தவறை உலக நாடுகள் செய்யுமேயானால் அங்கு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் என்று குரேஷி எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்தே பாகிஸ்தான் தொடர்ச்சியாக உலக நாடுகள் ஆப்கனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அதேபோல் தலிபான்கள் அனைத்து தரப்பினையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைக்காவிட்டால் உள்நாட்டுப் போர் உருவாகும் என்றும் எச்சரித்து வருகிறது.

இதற்கிடையில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளனர். புதிய அமைச்சரவையில் மொழிவாரியான சிறுபான்மையினர் சிலருக்கும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தலிபான்களின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அசீம் இஃப்திஹார் தெரிவித்துள்ளார். இதுமாதிரியான நடவடிக்கைகள் தான் ஆப்கானிஸ்தானை அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அழைத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x