Published : 23 Sep 2021 05:29 PM
Last Updated : 23 Sep 2021 05:29 PM
ஜிகாதிகளுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இன்னும் அதிகமான நெருக்கத்தைக் காட்டிவரும் பாகிஸ்தானுடனான உறவை அமெரிக்கா துண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அரசுக்கு உள்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்த க்ளிஃபோர்டு டி மே இது தொடர்பாக அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா கடைசி நேரத்தில் தலிபான்களிடம் அவமானப்பட்டு வெளியேறினர். இதற்கு பாகிஸ்தான் தான் முக்கியக் காரணம். கடைசி நேரத்தில் சொந்த மக்களையும், தங்களுக்குத் துணையாக இருந்த ஆப்கன் மக்களையும் கைவிட்டுச் செல்லும் சூழல் அமெரிக்காவுக்கு உருவானது.
1990களில் பாகிஸ்தான் தான் ஆப்கனில் தலிபான்கள் உருவாக வழிவகுத்தது. பாகிதான் பயிற்சியும் பணமும் கொடுத்து உருவாக்கியது. தலிபான்கள், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் நெருக்கம் காட்டியபோது அதனால் பாகிஸ்தான் சிறிதும் சலனம் கொள்ளவில்லை.
பாகிஸ்தான் மட்டும் தனது எல்லைகளை தலிபான்களுக்கு மூடி, ஆதரவை நிறுத்தியிருந்தால் அவர்களால் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது. ஆண்டுதோறும் ஆப்கனில் குளிர்காலம் வரும்போது தலிபான்கள் பாகிஸ்தான் முகாம்களுக்குச் சென்ருவிடுவர். இவையெல்லாம் பாகிஸ்தானின் கவனத்துக்குச் செல்லாமல் எப்படி நடந்திருக்கும்? பாகிஸ்தானின் இந்த ஆதரவால் தான் அமெரிக்கத் தலைவர்கள் சோர்வடைந்து போயினர். கடைசியில் தலிபான்கள் எதிர்பார்த்து கணித்ததுபோல் அமெரிக்கா வெளியேற நேர்ந்தது.
பாகிஸ்தான் தலைவர்கள் இப்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், ஜிகாதிகளையும் ஆதரிக்கின்றனர். ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறியவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிமை விலங்குகள் அறுந்தன என விமர்சிக்கிறார்.
2002 முதல் 2018 வரை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. அத்தனையும் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், தலிபான் ஆதரவையும் நிறுத்தவில்லை, அடிப்படைவாதக் கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் சீனாவுடனும் இணக்கமாக இருக்கிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லீம்கள் மீது சீனா நடத்தும் தாக்குதலையும் கண்டுகொள்ளாமல் கூட பாகிஸ்தான் சீனாவை ஆதரிக்கிறது.
பாகிஸ்தான் தொடர்ந்து தலிபான், அல் கொய்தா இன்னும் பிற தீவிரவாத அமைப்புகளுடன் நேசமாக இருந்தால் நிச்சயமாக அமெரிக்கா பாகிஸ்தான் உறவை யாராலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT