Published : 23 Sep 2021 11:58 AM
Last Updated : 23 Sep 2021 11:58 AM
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின், காபூல் நகரில் பெண்களால் நடத்தப்படும் ரெஸ்டாரன்ட், தேநீர் விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
காபூல் நகரைத் தலிபான்கள் கைப்பற்றியபின் தலிபான் தீவிரவாதிகளுக்கு அச்சப்பட்டு பெண்களால் நடத்தப்படும் கடைகளுக்கு எந்தப் பெண் ஊழியரும் பணிக்கு வரவில்லை. அந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை என்று டோலோ செய்திகள் தெரிவிக்கின்றன
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த 8-ம் தேதி அறிவித்தனர்.
தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையிலும், இணை அமைச்சர்களிலும் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில், பெண்களுக்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை மாணவிகள் வருகை குறித்து தலிபான்கள் ஏதும் அறிவிக்கவில்லை. உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள், மாணவிகளைப் பார்க்கா வகையில் திரையிடப்பட்டு வகுப்புகள் நடத்தவும், மாணவிகளுக்குப் பெண் பேராசிரியர்கள் மட்டும்தான் வகுப்புகளை எடுக்க வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்களுக்கான உரிமைகளைப் பறிக்கும் தலிபான்கள் ஆட்சியைக் கண்டு பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காபூல் நகரில் பல இடங்களில் பெண்களால் நடத்தப்படும் ரெஸ்டாரன்ட், தேநீர் கடைகள் மூடப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
ரெஸ்டாரன்ட் உரிமையாளரான நிகி தபாசம் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 30 லட்சம் ஆப்கன் பணம் செலவு செய்து ரெஸ்டாரன்ட்டைத் தொடங்கினேன். என் கடையில் பணியாற்றும் அனைவரும் பெண்கள்தான். ஆனால், காபூல் நகரைத் தலிபான்கள் கைப்பற்றியபின் கடையை மூடிவிட்டேன். நாள்தோறும் 20 ஆயிரம் பணம் கிடைத்துவந்தது.
ஆனால், இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறேன். ஆப்கனில் ஏராளமான பெண்கள் சம்பாதித்துதான் குடும்பத்தை நடத்துகிறார்கள். தலிபான்கள் பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதித்துள்ளதால், பல பெண்களின் நிலை மோசமாக இருக்கிறது. வேறு வழியின்றிக் கிடைத்த பணியைச் செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு கடை உரிமையாளரான பெண் கூறுகையில், “பெண்கள் கடைகளை நடத்தவும், வேலைக்குச் செல்லவும் தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும். இப்படி இருந்தால், தலிபான்கள் எவ்வாறு நிர்வாகத்தைத் தொடங்குவார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்
காபூல் பெண் பணியாளர் சங்கத்தின் தலைவர் நூர் உல் ஹக் ஒமரி கூறுகையில், “ பெண்கள் முதலீடு செய்வது துரதிர்ஷ்டமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் வேலையிழந்துவிட்டனர். பணத்தையும் இழந்துவிட்டனர். சில இடங்களில் பெண்கள் தங்களின் விலை உயர்ந்த ஹோட்டல்கள், கடைகள், தேநீர் விடுதிகளைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். ஆப்கன் பெண்கள் ஹோட்டல், தேநீர் விடுதி மட்டுல்லாது பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்து வந்தனர். ஆனால், தலிபான்கள் ஆட்சி்க்கு வந்தபின் அந்த முதலீடு நிறுத்தப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT