Published : 06 Feb 2016 08:51 AM
Last Updated : 06 Feb 2016 08:51 AM
தைவானில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 221 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யூஜிங் நகரின் தென்கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
221 பேர் மீட்பு:
தைவானின் தைனான் நகரில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஒரு அடுக்குமாடியில் 16 தளங்களும், மற்றொன்றில் 16 தளங்களும் உள்ளன. அங்கிருந்து இதுவரை 221 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இவர்களில் 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்க அதிர்ச்சியில் இருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைனான் நகரின் வெய் குவன் உயர் அடுக்கு மாடி கட்டிடங்கள்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரம்:
நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தைனான் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT