Last Updated : 21 Sep, 2021 12:06 PM

1  

Published : 21 Sep 2021 12:06 PM
Last Updated : 21 Sep 2021 12:06 PM

கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ: லிபரல் கட்சி வெற்றி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | கோப்புப்படம்

ஒட்டாவா

கனடா நாட்டில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளதை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 6 ஆண்டுகளில் சந்திக்கும் 3-வது பொதுத் தேர்தலாகும். வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஆனால், மற்ற கட்சிகளான ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்), பிளாக் குயிபிக்கோயிஸ் ஆகிய கட்சிகளைவிட அதிகமான இடங்களை லிபரல் கட்சி பிடிக்கும் என்றாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெரியவில்லை.

நியூயார்க் டைம்ஸ், சிடிவி, குளோபல் நியூஸ், சிபிசி, ஸ்புட்னிக் ஆகிய ஊடகங்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்காக 170 இடங்களைப் பிடிக்குமா என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. கனடாவில் மொத்தம் 338 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 170 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் ட்ரூடோவின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்குள் முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று 338 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் குயிபெக் மாகாணத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஆளும் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றாலும் ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை கிடைக்காது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 140 முதல் 150 இடங்களில்தான் வெற்றி பெறும், பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்கள் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளன.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலில் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 99 இடங்களில் முன்னிலையிலும், பிளாக் குயிபெக்கோயிஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் 17 பேரும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் 13 பேரும், புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் 10 பேரும், கனடா மக்கள் கட்சி சார்பில் 5 பேரும் போட்டியிடுகின்றனர். தற்போது கனடா நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 பேர் எம்.பி.யாக உள்ளனர். இந்த முறைத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எத்தனை பேர் எம்.பி.யாவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கனாடாவில் கடந்த மாதம் கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே திடீரென தேர்தலை லிபரல் கட்சித் தலைவர் ட்ரூடோ அறிவித்தார். கரோனா பரவலை வெற்றிகரமாகச் சமாளித்தது, காலநிலை மாற்றம், அனைவருக்கும் வீடு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒடுக்கியது உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்ததால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருப்பதால், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க பிரதமர் ட்ரூடோ தயாரானார்.

ஆனால், ட்ரூடோவின் எண்ணம் எந்த அளவுக்கு இந்தத் தேர்தலில் கைகொடுக்கும், 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கடந்த முறையைப் போன்று சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ பிரதமராவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தைத் தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப் போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x