Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் கட்சி வெற்றி

மாஸ்கோ

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கீழவையில் மொத்தமுள்ள 450 இடங்களில், 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 225 இடங்களுக்கு கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற கீழவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஆளும் கட்சி மறுத்துள்ளது.

315 இடங்கள்..

ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் பொதுச்செயலாளர் ஆண்ட்ரே துர்சக் மாஸ்கோவில் நேற்று கூறும்போது, "எங்களது கட்சியின் வேட்பாளர்கள் 195 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மேலும் 120 இடங்கள் கிடைக்கும். தேர்தல் தோல்வி காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற கீழவையில் அதிபர் புதினின் கட்சிக்கு தற்போது 334 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போதைய தேர்தல் மூலம் அந்த கட்சி 315 இடங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடையும்போது கட்சிகள் பெறும் இடங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் 2024-ம் ஆண்டில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இதற்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் அதிபர் புதினுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x