Published : 20 Sep 2021 07:15 PM
Last Updated : 20 Sep 2021 07:15 PM
ஆப்கனில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் பல்வேறுப் பணிகளில் இருந்த பெண்களும் இனி வீட்டிலேயே இருக்க வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முழுமையாக ஆட்சி அதிகாரம் தலிபான்களின் கையில் வந்தது. அங்கு இடைக்கால ஆட்சி அமைந்துள்ள நிலையில், பெண்ணுரிமைக்கு எதிராக அன்றாடம் பல அறிவிப்புகளை வெளியிட்டு அதிர வைக்கின்றனர் தலிபான்கள். பெண் கல்விக்கு பல்வேறு முட்டுக்கட்டையும் விதித்து வரும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையானது தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
பெண்கள் நலத் துறையின் கீழ் இயங்கிவந்த 100 மில்லியன் டாலர் முதலீட்டிலான பெண்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் கிராமப்புர மேம்பாட்டு திட்டத்தையும் முடக்கியுள்ளனர்.
இந்நிலையில் காபூல் நகர மேயர் ஹம்துல்லா நமோனி ஸ்புட்னிக் இதழக்கு அளித்த பேட்டியில், நாங்கள் எந்தெந்தப் பணிகளை எல்லாம் ஆண்கள் செய்ய முடியாதோ அந்தப் பணிகளில் எல்லாம் பெண்கள் தொடர அனுமதித்துள்ளோம். ஆனால் ஆண்கள் செய்யக் கூடிய பணிகளை இனி அவர்களே தொடர்வார்கள். பெண்கள் வீட்டில் இருக்கலாம். நிலைமை சரியாகும் வரை பெண்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
காபூல் மட்டும் 2900 அரசப் பணியாளர்களில் 27% பேர் பெண்களாக இருந்தனர். வருவாய், கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகளில் இருந்தனர். இந்நிலையில் காபூல் மேயர் அவர்களை இனி பணிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தலிபான்கள் பெண்களை நிராகரிப்பது மனித குலத்தை நிராகரிப்பதற்கு சமம் என அந்நாட்டுப் பெண்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT