ஆப்கனில் பெண் கல்வி பறிக்கப்பட்டால் மீளமுடியாத பின்விளைவுகள் ஏற்படும்: யுனெஸ்கோ, யுனிசெஃப் எச்சரிக்கை
தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ, யுனிசெஃப் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கடந்த மாதம் கைப்பற்றியபின் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இப்போது செயல்படுகிறார்கள். காமா செய்திகள் தரப்பில் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மதரீதியான பள்ளிக்கூடங்கள் சனிக்கிழமை முதல் திறக்கலாம். ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரலாம்” எனத் தெரிவித்துள்ளது.
1996-2001ஆம் ஆண்டுவரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில் அதிலிருந்து மாறுபட்டுள்ளனர்.
இந்நிலையில் யுனிசெஃப், யுனெஸ்கோ அமைப்பு பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோ விடுத்த அறிக்கையில், “அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டால், அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதிக்காவிட்டால் மீளமுடியாத பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி அளவில் மாணவிகளுக்குத் தாமதமாக அனுமதி அளிப்பது அவர்களின் கல்வியிலும், வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் கல்வி இடைநிற்றல் விகிதத்தை அதிகப்படுத்தி, எதிர்விளைவாக குழந்தைத் திருமணத்துக்கு இட்டுச் செல்லும். மேலும், மாணவர்கள், மாணவிகளுக்கு இடையிலான கல்வி கற்கும் இடைவெளியே அதிகப்படுத்தி, பெண் குழந்தைகள் உயர் கல்வி பெறுவதையும், வாய்ப்புகளையும் பறிக்கும். ஆப்கனில் கல்வி வாய்ப்புகளைப் பெண்களுக்கு வழங்கியதன் மூலம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள். அதைப் பாதுகாக்க வேண்டும்.
படித்த மாணவர்கள், மாணவிகள் எதிர்காலத்தில் ஆப்கனை செம்மைப்படுத்தக்கூடியவர்கள். கல்வி உரிமை மூலம் இரு பாலின மாணவர்களும் பலன் அடைய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''ஆப்கனின் எதிர்காலம் நன்கு படித்த மாணவர்கள், மாணவிகளைச் சார்ந்திருக்க வேண்டும். ஆதலால் ஆப்கனை நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள், அனைத்துக் குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெற சமமான அளவில் வாய்ப்பை வழங்க வேண்டும். பள்ளிகளை அனைத்துப் பிரிவினருக்கும் திறக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்'' என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
