Published : 20 Sep 2021 02:37 PM
Last Updated : 20 Sep 2021 02:37 PM
ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் காயங்களுடன் பிடிபட்டுள்ளார்.
ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம். இங்கு இன்று (திங்கள்கிழமை) மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் காயங்களுடன் பிடிபட்டுள்ளார்.
அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், இளைஞருக்குப் பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளன.
பொதுவாக அமெரிக்காவை ஒப்பிடும்போது ரஷ்யாவில் இதுபோன்று பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது மிகமிகக் குறைவும். அதுவும் கல்வி நிலையங்களில் மிகவும் அரிதானது. காரணம் ரஷ்யாவில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகமாக இருக்கும்.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு ரஷ்யாவில் ஒரு கல்லூரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்னதாக 2018ல், கிரிமியாவில் கெர்ச் தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். கிரிமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனிடமிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கிரிமியா கலூரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவர் அமெரிக்காவில் 1999 ஆம் ஆண்டு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்களில் ஒருவர் அணிந்திருந்த அதே போன்றதொரு டிஷர்ட்டை அணிந்துகொண்டு வன்முறையில் ஈடுபட்டார்.
2020 ஆம் ஆண்டு சரடோவ் நகரில் பள்ளியில் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்ட இரண்டு பதின்ம வயதுச் சிறாரை போலீஸார் முன் கூட்டியே கைது செய்தனர்.
இந்நிலையில், ரஷ்ய இளைஞர்கள், சிறார் ஆன்லைன் வாயிலாக மேற்கு உலக நடவடிக்கைகளில் அதிக ஈர்ப்பு கொண்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், மாணவர் ஒருவர் 8 பேரை கொலை செய்துள்ளதால் நாட்டில் துப்பாக்கி விற்பனை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குதல் ஆகியனவற்றில் புதிய கொள்கைகளை வகுக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் வேட்டையாடுவதற்கான ரைஃபிள் துப்பாக்கிக்கான உரிமம் எளிதில் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT