Published : 18 Sep 2021 08:52 AM
Last Updated : 18 Sep 2021 08:52 AM
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியபின் அந்நாட்டு பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது, உலக நாடுகளும் உதவியை நிறுத்திவருவதால் அங்குள்ள மக்கள் பட்டினியாலும், பணமில்லாமலும் வறுமையில் சிக்கியுள்ளனர்.
வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை தெருக்களில் கொண்டு வந்து போட்டு விற்பனை செய்து, குழந்தைகளுக்கு உணவு வாங்க வேண்டிய நிலைக்கு காபூல் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் காபூல் நகரைக் கைப்பற்றியபின் மக்கள் தங்களின் சேமிப்பை வங்கியிலிருந்து எடுக்க முயன்றும் ஏராளமானோரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தலிபான்களுக்கு அஞ்சி வங்கிகள் பூட்டப்பட்டதால், தாங்கள்சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத நிலைக்கு காபூல் மக்கள் தள்ளப்பட்டனர்.
காபூல் நகரிலிருந்து பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதாலும், வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படுவதாலும், மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகூட எகிறத் தொடங்கிவிட்டது.
காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திவரும் தரைவிரிபுகள், ஃபிரிட்ஜ், எல்இடி டிவி உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஏதாவது கிைடத்தால் போதும் குழந்தைகளை பட்டினிபோடாமல் சாப்பாடு வழங்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டுப் பொருட்களை விற்கும்நிலைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காபூல் நகரவாசி ஒருவர் கூறுகையில் “ என்னுடைய வீட்டு உபயோகப் பொருட்களை பாதிக்கும் குறைவான விலைக்கு விற்றேன். 25 ஆயிரம் ரூபாயக்கு வாங்கிய குளிர்சாதனப் பெட்டியை 5ஆயிரத்துக்கு விற்றேன் நான் என்ன செய்ய முடியும், குழந்தைகள்பட்டிணியால் வாடுகிறார்களே சாப்பாடு கொடுக்க வேண்டுமே” எனத் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் ஏற்கெனவே நலிவடைந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைகளுக்குச் சென்றபின் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றியவுடன் வெளிநாட்டு உதவிகள் கடந்த மாதம் 15ம் தேதியுடன் நிறுத்தப்பட்டன. அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்தது.
சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திவிட்டன. தலிபான்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என 39 நாடுகளைக் கொண்ட நிதி தடுப்புக் குழுவும் எச்சரித்துள்ளது.
உயிர்வாழ எண்ணி ஆப்கன் மக்கள் தங்களின் சொத்துக்களை விற்று தலிபான் பிடியிலிருந்து வெளியேற முயல்கிறார்கள், கடந்த கால வரலாறு மீண்டும் திரும்புமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.
சர்வதேச பார்வையில் தங்களை மிதவாதிகள் என காட்டிக் கொள்ளவும், கடந்தகால ஆட்சியைப் போல் இல்லாமல் இருக்கவும் தலிபான் தீவிரவாதிகள் முயல்கிறார்கள். ஆனால், காபூல் விமானநிலையத்தில்நிலவும் காட்சிகள் தலிபான்கள் தங்களின் கடந்த கால சிந்தனையிலிருந்து மாறவில்லை என்பதையே உலகிற்குகாட்டுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT