Published : 17 Sep 2021 05:52 PM
Last Updated : 17 Sep 2021 05:52 PM

அகதிகளாக ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சும் ஆப்கன் தூதர்கள்: தலிபான்களால் உருவான அவலநிலை

வாஷிங்டன்னில் உள்ள ஆப்கன் தூதரகம் | படம்: ராய்ட்டர்ஸ்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடப்பதால் வெளிநாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் செயலிழந்துள்ளன.

போதிய நிதியில்லாமல் உலக நாடுகளின் ஆதரவும் இல்லாமலும் சவாலான சூழலில் அவை உள்ளன. குறிப்பாக ஆப்கன் தூதர்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கின்றனரோ அந்த நாடே தங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆப்கனில் ஜனநாயக ஆட்சியை வீழ்த்தி தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் அறிவித்துள்ள பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தேடப்பட்ட தீவிரவாதிகளாக இருந்தவர்கள். சிலர் குவான்டனாமோ சிறையிலும் இருந்தவர்கள். இதனால், ஆப்கனில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இன்னும் எந்தவொரு நாடும் வெளிப்படையாக அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள ஆப்கன் தூதர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாகிவிட்டது.

பெர்லினில் உள்ள ஆப்கன் தூதரக அதிகாரி ஒருவர் பெயர் தெரிவிக்காமல் கூறுகையில், "நானும் எனது சகாக்களும் நாங்கள் இருக்கும் நாடுகளே எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஆப்கனில் எனது குடும்பம் இருக்கிறது. எனது மனைவியும் 4 மகள்களும் அங்கே உள்ளனர். அவர்களுக்கு என்னவாகுமோ என்று ஒவ்வொரு நொடியும் அஞ்சுகிறேன்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் நானும் என்னைப்போல் உள்ள சில தூதர்களும் அடைக்கலம் வேண்டி இரைந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் இருக்கும் நாட்டிலேயே அகதிகளாகி குடும்பத்தையும் இங்கேயே வரவழைக்க முயற்சிக்கிறோம்'' என்றார்.

ஆனால், ஆப்கனின் இடைக்கால வெளியுறவு அமைச்சரான முல்லா அமீர் கான் முட்டாகி, வெளிநாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் வழக்கம்போல் இயங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு தூதர்கள் ஆப்கனின் சொத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளிலும் ஆப்கன் தூதரங்களைச் சார்ந்து 3000 பேர் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கன் தூதர்கள், தூதரக அதிகாரிகள் நிலை குறித்து பிரிட்டன் பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ''தூதரகங்கள் செயலற்றுவிட்டன. தூதர்கள் இப்போது எந்த ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இல்லை. அவர்கள் செயல்படுத்த அரசின் கொள்கையென்று ஏதுமில்லை. இப்போதைக்கு தூதரக அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கலாம். ஆப்கனுக்கு அவர்கள் திரும்பிச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற ரீதியில் வெளிநாடுகளில் உள்ள ஆப்கன் தூதர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கலாம்'' என்று பரிந்துரைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் சர்வதேச சமூகம் அதனை அங்கீகரிக்க வேண்டும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x