Published : 16 Sep 2021 07:30 PM
Last Updated : 16 Sep 2021 07:30 PM

நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்; எங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை: தலிபான்கள்

நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் எங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் வந்தது. அதன்பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் தான் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான் எதிர்ப்புக் குழுவினரை சமாளிப்பதில் தலிபான்கள் கவனம் திரும்பியது. பஞ்ச்ஷீர் விவகாரத்தில் தலிபான் தலைவர்களுக்குள்ளேயே உட்பூசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அனஸ் ஹக்கானி தரப்பினருக்கும் பரதார் தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மேலும் இந்த சண்டையில் முல்லா அப்துல் கனி பரதார் சுடப்பட்டார். அவர் காயங்களுடன் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பரபரப்புத் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை பரதார் ஓர் ஆடியோ மெசேஜ் மூலம் திட்டவட்டமாக மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று, அனஸ் ஹக்கானியும் ட்விட்டரில் ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் கொள்கை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளது. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். நாட்டில் வளத்தை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் முனைப்புடன் இருக்கிறோம் என்றார்.

ஆனால், முல்லா ஒமர் போன்ற ஒரு ஸ்திரமான தலைவர் இல்லாமல் தலிபான்களை தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பது மிகமிகக் கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x