Published : 14 Sep 2021 03:12 PM
Last Updated : 14 Sep 2021 03:12 PM
பள்ளிகளில் பரவும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் கரோனா வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் கரோனா உலகமெங்கும் பரவிவிட்டது. கரோனா முதல் அலையை சீனா தீவிர லாக்டவுன், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தியது. இது உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இந்நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது, மூன்றாவது அலை என்று வேகமெடுக்க சீனா ஆங்காங்கே ஏற்படும் தொற்றுகளுக்கு ஏற்ப நுண் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வந்தது.
இந்நிலையில், தென் சீனப் பகுதியில் பல்வேறு நகரங்களிலும் ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பள்ளிக் குழந்தைகள் வாயிலாகப் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் நகரில் மக்கள் தொகை 3.2 மில்லியன். இங்குள்ள அனைவருக்குமே கரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு தென்பட அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 14 நாட்கள் தனிமையில் இருந்த அந்த நபருக்கு பரிசோதனையில் நெகடிவ் என்றே வந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை எனத் தெரிகிறது.
சீனாவில் ஆங்காங்கே டெல்டா வைரஸ் பாதிப்பு தென்படுவதால் அந்நாடு டெல்டாவைக் கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று மட்டும் ஃபுஜியானில் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை சீனா 2 பில்லியன் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 70% பேருக்கு அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீன அரசு அஞ்சுகிறது.
புட்டியான் நகரில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம் சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் மீண்டும் கரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT