Published : 13 Sep 2021 07:06 PM
Last Updated : 13 Sep 2021 07:06 PM
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை எதிர்த்து வந்த இளம் பெண்ணின் 4 வயது குழந்தை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கரோனா தடுப்பூசிதான் உயிரைக் காக்க ஒரே பேராயுதம் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர ஒரு சிலரோ தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அப்படி தடுப்பூசி எதிர்ப்பாளராக இருந்த ஓர் இளம் பெண்ணின் 4 வயது குழந்தை கரோனா தொற்றால் இறந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கல்வேஸ்டன் கவுன்டியைச் சேர்ந்தவர் காரா ஹார்வுட். இவர் தொடர்ந்து கரோனா தடுப்பூசியை எதிர்த்து வந்துள்ளார். பல இடங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பேசியும் வந்துள்ளார். இதனாலேயே இவர் கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தொற்று ஏற்பட்டுள்ளது. இவரது கடைசி மகள் கேளி குக். இவருக்கு 4 வயது. இந்தக் குழந்தையுடன் பிறந்தவர்கள் மூவர். இந்நிலையில் காராவுக்குக் கடந்த திங்கள் கிழமை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாலும் கூட அடுத்தடுத்து வீட்டில் இருந்த அனைவருக்குமே தொற்று ஏற்பட்டது.
இந்தத் தொற்று 4 வயது குழந்தையான கேலி குக்கையும் விட்டுவைக்கவில்லை. கேலிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே அவருக்கு அதற்கான மருந்துகளைக் கொடுத்துள்ளனர். ஆனால் மறுநாள் காலை 7 மணியளவில் குழந்தையைப் பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. குழந்தைக்கு வேறு இணை நோய்கள் இல்லை. இருப்பினும் கரோனா பாதித்த ஒரே நாளில் குழந்தை இறந்தது அந்தக் குடும்பத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குழந்தையின் தாய் காரா தனது தடுப்பூசி எதிர்ப்புக் கொள்கை தவறானது முட்டாள்தனமானது எனப் புலம்பி வருகிறார்.
உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் தடுப்பூசிக்கு எதிராகப் பேசியிருக்கிறேன். அப்படிச் செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் இனிமேல் எதையும் மாற்ற முடியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அந்நாடு 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் கொண்டோருக்கு மூன்றாவது டோஸ் செலுத்திவருகிறது. ஆனால், இன்னும் அங்கு சிலர் முதல் டோஸ் கூட செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்களை எப்படியாவது மனமாற்றம் செய்ய அரசு முயன்று வருகிறது. மேலும், சமீப காலமாக அமெரிக்காவில் கரோனாவால் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கேலி குக்கின் டெக்சாஸில் கடந்த வாரம் மட்டுமே 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 24 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தடுப்பூசி வழங்கப்படுகிறது. உயிரிழந்த கேலி குக் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அவரது குடும்பத்தில் யாருமே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
மேலும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் குழந்தை கேலிக்கு அவரது தாயார் மூலமே தொற்று பரவியதும் உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT