Published : 13 Sep 2021 05:35 PM
Last Updated : 13 Sep 2021 05:35 PM

கரோனாவுக்குப் பயந்து  குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் பயணித்த 7 வயது சிறுவன் உட்பட 15 பேர்: எங்கு தெரியுமா?

கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் மறைந்தபடி 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வியட்நாம் நாட்டில் கரோனா 4வது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான வாகன அனுமதி தவிர உள்நாட்டுப் போக்குவரத்து பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

வியட்நாமின் தென் பகுதி கரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே லட்சக்கணக்கான மக்கள் ஊரடங்கில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தென் பகுதியில் உள்ள பின் துவான் மாகாணத்தில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் ஒரு குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்கள் 15 பேருமே கோவிட் நெகடிவ் சான்றிதழை வைத்திருந்தனர்.

போலீஸ் விசாரணையில் நாட்டின் தென் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் அங்கிருந்து வட பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். போலீஸார் வாகனத்தைத் திறந்தபோது அனைவருமேன் வியர்த்த நிலையில் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த வாகனத்தில் குளிர்சாதன இயந்திரத்தை இயக்கினால் அது உறைநிலையில் குளிரை உண்டாக்குவதால் இயந்திரத்தை இயக்க வேண்டாம் என்று தாங்களே ஓட்டுநரிடம் வேண்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

7 வயது சிறுவனின் தந்தை கூறும்போது, இதுபோன்று குளிரூட்டப்பட்ட டிரக்கில் பயணிப்பது ஆபத்தானது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து தென் பகுதியிலேயே இருந்தால் நிச்சயமாக தொற்றுக்கு ஆளாவோம் என்றார்.

15 பேரும் டோங் நை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு இதுவரை 35000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 320 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாம் நாட்டில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 11,400 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி ஏற்றுத்தாழ்வு:

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி தான் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியில் 85% தடுப்பூசி வளர்ந்த நாடுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் 3வது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்நிலையில் ஏழை நாடுகள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கின்றன. இதனால் 2021 டிசம்பர் இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை நிறுத்தி வைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x