Published : 11 Sep 2021 05:55 PM
Last Updated : 11 Sep 2021 05:55 PM
புகைப்படங்கள் எப்போதும் நல்ல நினைவுகளை நம்முள் கடத்தக் கூடியவை ஆனால் சில புகைப்படங்கள் சோகத்தின் சாட்சியாக, கொடூரத்தின் உருவகமாக அமைந்துவிடுவதும் உண்டு.
செப்டம்பர் 11 2001 அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத நாள். அந்த நாளில் தான் உலகமே பயங்கரவாதத்தின் கோர முகத்தை அப்பட்டமாகப் பார்த்தது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வல்லரசு என்றெல்லாம் அறியப்பட்ட அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்காவின் வர்த்தக அடையாளமாகத் திகழ்ந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது விமானம் மோதியது. பயணிகள் விமானத்தைக் கடத்தி ஆப்கனின் அல் கொய்தா பயங்கரவாதிகள் அந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இரட்டைக் கோபுரத் தாக்குதலை உணர்வதற்குள்ளதாகவே ராணுவ தலைமையகமான பென்டகனில் ஒரு விமானம் மோதியது. 4வது விமானம் பென்சில்வேனியாவுக்கு வெளியே ஒரு விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்தத் தாக்குதல்கள் மேக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயற்கைக்கோள் உதவியுடன் பதிவு செய்திருந்தது.
20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மேக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயற்கைக்கோள் புகைப்படஙளை வெளியிட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களில் சில:
2001 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் சென்றது. அப்போது அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துக்கு தலிபான்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். அல் கொய்தாவை அழிக்கச் சென்ற இடத்தில் ஆப்கானிஸ்தானில் நிலையான அரசை ஏற்படுத்தும் முயற்சியையும் அமெரிக்கா கையில் எடுத்தது. அமெரிக்காவுடன் நேட்டோ படைகளும் இணைந்தன. பத்து ஆண்டுகளுக்குப் பின் 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் கொல்லப்பட்டார்.
அதன் பின்னரும் 10 ஆண்டுகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்துள்ளன. ஆனால், படிப்படியாக படைகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. அன்றிலிருந்தே தலிபான்கள் புத்துணர்வுடன் ஆக்கிரமிப்பைத் தொடங்கினர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் வசம் வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தான் எப்படி இருந்ததோ அதே நிலைமையை மீண்டும் ஏற்படச் செய்யும் வகையில் அமெரிக்கா ஆப்கனில் இருந்து கிளம்பியுள்ளது. இது தொடர்பாக உலக அரங்கில் பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றனர். அல் கொய்தாவைப் போல் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் தலிபான்களுடன் கைகோக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளுக்கு இல்லாமல் இல்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT