Published : 11 Sep 2021 04:33 PM
Last Updated : 11 Sep 2021 04:33 PM
ஆப்கானிஸ்தானில் உள்ள பெணளுக்காக ஒருசேரக் குரல் கொடுங்கள் என்று உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் மலாலா ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு வயது 15. அந்தக் காலகட்டத்தில் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்கள் பெண்கள் வரவேண்டாம் என்று பேனர்களை வைத்திருந்தன.
ஆனால், நான் எனது பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்துவந்தேன். ஒருநாள் என்னை ஒரு துப்பாக்கி ஏந்திய தலிபான் தடுத்து நிறுத்தினார். பள்ளி வாகனத்திலிருந்து என்னைக் கீழே இறக்கி என்னை நோக்கிச் சுட்டார். எனது குடும்பமே அச்சத்தில் உறைந்து போனது.
இன்று உலகமே ஒன்று சேர்ந்து குரல் எழுப்பாவிட்டால் விரைவில் ஆப்கனில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் என்னைப் போன்று இதே கதையைச் சொல்ல நேரும்.
ஆப்கன் பெண்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யக்கூடிய உரிமையைக் கேட்கின்றனர். ஆனால், காபூலில் அவர்களின் போரட்டம் கண்ணீர் புகைக்குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் ஒடுக்கப்படுகிறது.
2012க்குப் பின்னர் ஆப்கனில் உள்ள நிறைய பெண் கல்வியாளர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் விளைவாக கடந்த
ஆண்டு ஆப்கனில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளில் 39% பேர் பெண்கள். ஆனால் இப்போது அந்த முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. அந்தப் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சில இடங்களில் பெண்களுக்கான மேல்நிலைக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வேலைக்கு வர வேண்டாம் என்றும் மாணவிகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்றும் மிரட்டபட்டு வருகின்றனர். உலக நாடுகளே, ஆப்கானிஸ்தானில் உள்ள பெணளுக்காக ஒருசேரக் குரல் கொடுங்கள்.
இவ்வாறு மலாலா பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT