Published : 11 Sep 2021 03:04 PM
Last Updated : 11 Sep 2021 03:04 PM
செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் இரண்டு பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது.
இந்தப் பாறை மாதிரிகள் செவ்வாயில் பண்டைய காலத்தில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உணர்த்துவதாகவும் அது தொடர்பான ஆராய்சிகளை இனி முன்னெடுக்க உள்ளதாகவும் நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதன் நீட்சியாக கடந்த பிப்ரவரி மாதம் நாசா தன் பெர்சிவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியது.
பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்தது.
செவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், மோன்ட்டெனீர் "Montdenier" என்று பெயரிடப்பட்டுள்ள மாதிரியையும், மோன்டெகனாக் "Montagnac" எனப் பெயரிடப்பட்டுள்ள மாதிரியையும் சேகரித்துள்ளது.
இரண்டு மாதிரிகளுமே அளவில் ஒரு பென்சிலைவிட சற்றே அதிகமான விட்டத்தைக் கொண்டவை, 6 செ.மீ நீளம் கொண்டவை. இவை தற்போது ரோவரில் உள்ள குடுவையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமே செவ்வாயிலிருந்து மாதிரிகளை எடுக்கும் முயற்சி நடந்தது. ஆனால் பெர்சிவரன்ஸ் துளையிட்ட பகுதியிலிருந்த பாறை நொறுங்கிவிழும் தன்மையில் இருந்ததால் அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் நடந்த முயற்சியில் வெற்றிகரமாக இரண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
"இந்த இரண்டு மாதிரிகளும் எரிமலைக் குழம்பின் எச்சத்தால் உருவான பாறை வகையைச் சார்ந்தது. இந்த பாறை குறித்து இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இது நிலத்தடி நீருடன் தொடர்பில் இருந்ததற்கான அடையாளம் இருக்கிறது" என்று நாசாவின் ஆராய்ச்சியாளர் கேட்டி ஸ்டேக் மார்கன் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின் படி இந்த பாறைகள் நீண்ட காலமாக நிலத்தடி நீருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டால் பாறை இடுக்குகளில் நுண்ணயிர்கள் பழங்காலத்தில் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறு அதிகம் என்றார். பெர்சிவரன்ஸ் ரோவர் சேகரித்துள்ள மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சிகளைத் தொடர்வதே நாசாவின் நோக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT