Published : 09 Sep 2021 01:42 PM
Last Updated : 09 Sep 2021 01:42 PM
தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 3.10 கோடி டாலர் மதி்ப்பிலான உதவிகள் வழங்கப்படும் என சீனா அரசு அறிவித்து, தலிபான்கள் அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யின் அளித்த பேட்டியில் “ ஆப்கானிஸ்தானின் அண்டைநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பில் ஆப்கன் மக்களுக்கு உதவும் வகையில் 3.10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஆப்கன் மக்களுக்கு உணவு, குளிர்காலத்தை சமாளிக்கும் பொருட்கள், தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை தலிபான் அரசிடம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வெளியி்ட்ட அறிவிப்பில், “ ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 லட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கும். அமெரிக்க நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தான் இருந்துள்ளது. அமெரிக்கா இங்கிருந்து சென்றாலும், தனது பொறுப்புகளை உணர்ந்து ஆப்கன் மக்களுக்கு உதவ வேண்டும், வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரத்தை மதிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மேற்குப்பகுதியான ஜின்ஜியாங்கின் வக்கான் பகுதிவரை ஏறக்குறைய 80கி.மீ எல்லையை ஆப்கானிஸ்தானுடன் சீனா பகிர்ந்துள்ளது. சாலை அமைத்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் வழியாக அதிகமான முதலீட்டை சீனா செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தலிபான் தலைவர்கள், சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சார்பில் தியான்ஜின் பகுதியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சீனா தரப்பில் பங்கேற்ற அதிகாிகள் “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ராணுவம் மற்றும் அரசியல் ரீதியான சக்தியை கொண்டுள்ளார்கள். நாட்டின் அமைதிப் பணி, மறுசீரமைப்பு, புனரமைப்புப் பணிகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்” என புகழாரம் சூட்டினர்.
இதற்கு பதிலாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் கூறுகையில் “ எங்கள் அண்டை நாடுகளில் சீனா மிகுந்த முக்கியமான, வலிமையான நாடு. அந்நாட்டு எங்களுக்கு சாதகமான உறவும், நல்ல நட்புறவும் கடந்த காலத்திலிருந்தே இருக்கிறது.
வரும் காலத்தில் சீனாவுடனான உறவை வலிமைப்படுத்த விரும்புகிறோம், பரஸ்பரத்தை வலிமைப்படுத்த உள்ளோம். ஆப்கன் மண்ணைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிராக எந்தவிதமான அழிவு சக்திகளையும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் ” எனத் தெரிவி்த்துள்ளார்.
ஆப்கனில் அமைய உள்ள தலிபான் தீவிரவாதிகள் தலைமையிலான இடைக்கால அரசு அமைய உள்ளதாக பேச்சு எழுந்தபோது கத்தார் நாட்டில் தலிபான் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதர் பேச்சு நடத்தினார். அதில் இந்தியாவுக்கு எதிராக எந்த அழிவு சக்திகளும் ஆப்கன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தலிபான்களிடம் இந்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தலிபான் தீவிரவாதிகள் தலைமையில் அமைய இருக்கும் இடைக்கால அரசுடன் அதிகாரபூர்வமான தூதரக உறவு வைத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு எந்த நிலைப்பாடும் இதுவரை எடுக்கவில்லை. ஆனால், சீனா அரசு, தலிபான்களைப் புகழ்ந்தும்,ஆப்கனுக்கு உதவிகளை அளித்தும் தனது நெருக்கத்தை வலுப்படுத்தி வருவது இந்தியாவுக்கு எச்சரிக்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT