Published : 07 Sep 2021 06:15 PM
Last Updated : 07 Sep 2021 06:15 PM
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள், அமெரிக்காவின் ஆதரவாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய அந்நாட்டு மக்களை மீட்பதில் கத்தார் அளவுக்கு எந்த ஒரு நாடும் உதவி செய்யவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளின்கின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அங்கிருந்து வெளிநாட்டவர்களும், தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சிய ஆப்கானிஸ்தான் மக்களும் வெளியேறினர். ஆனால் ஆகஸ்ட் இறுதியில் ஐஎஸ்ஐஎஸ் கோராசன் அமைப்பின் பயங்கர தாக்குதல் நடைபெற்றது. இதனால் கடைசி நேரத்தில் மீட்புப் பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. இருப்பினும்,
ஆப்கானிஸ்தானிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கின் மற்றும் பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசிக்க கத்தார் வந்தனர். கத்தார் வெளியுறவு அமைச்சர் ஹமாத் அல் தானியை சந்தித்துப் பேசினர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக அமெரிக்க உயர் அதிகாரிகள் கத்தார் செல்வது இதுவே முதன்முறை.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பிளின்கின், ''ஆப்கானிஸ்தான் மீட்புப் பணிகளில் பல்வேறு நாடுகளும் உதவி செய்திருந்தாலும் கூட கத்தார் போல் எந்த ஒரு நாடும் உதவி செய்யவில்லை. ஆப்கன் மீட்புப் பணியால் முன் எப்போதும் இருந்ததைவிட கத்தாருடனான நட்பு மேலும் வலுவடைந்துள்ளது. இது எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். அமெரிக்கர்களுக்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இன்னும் பிற நாட்டவருக்கும் கத்தார் நீட்டிய உதவிக்கரம் வெகுகாலம் நினைவில் கொள்ளப்படும்'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சர், ''காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட தொழில்நுட்ப வல்லுநர்களை ஏற்கெனவே நாங்கள் ஆப்கன் அனுப்பியுள்ளோம். விரைவில் எல்லாம் சீரமைக்கப்படும். விமான நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT