Published : 06 Sep 2021 05:35 PM
Last Updated : 06 Sep 2021 05:35 PM
பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராடி வருகிறது.
இந்தநிலையில் ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிரான போரை இருவர் முன்னின்று நடத்தி வருகின்றனர். ஒருவர் ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே. தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990-களில் இளம் வயதில் அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கின் போராளி குழு தலைவர் அகமது ஷா மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
1996-ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். இரண்டாம் முறையாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறார்.
அகமது மசூத்
மற்றொருவர் மறைந்த தலைவர் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத். அகமது ஷா மசூத் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியாகவும் ஆப்கானிஸ்தான் தேசிய முன்னணித் தலைவருமான இவர் தற்போது தந்தை வழியில் நின்று தலிபான்களை எதிர்த்து வருகிறார்.
ஆப்கானிஸ்தான் போராளிகளின் கோட்டையான பஞ்ச்ஷீரை, 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது கூட நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக போராளி தலைவர் அகமது ஷா மசூத் வைத்திருந்தார். அவரது வழியில் அவரது மகனும் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்த இரு தலைவர்களும் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் 3-ம் தேதி கடைசியாக தலிபான் எதிர்ப்பு கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில் தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
அதில் ‘‘நான் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கின் நுழைவு வாயிலில் நிற்கிறேன். தலிபான்கள் என் இறந்த உடலை கடந்து சென்றால் மட்டுமே பஞ்ச்ஷீரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். நான் இப்போது உயிருடன் இருப்பதால் தான் உங்களுடன் பேசு முடிகிறது. பஞ்ச்ஷீரின் காலடியில் நிற்கிறேன்’’ என பதிவிடப்பட்டு இருந்தது.
அகமது மசூத் பாதுகாப்பாக இருப்பதாக போராளி குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால் பஞ்ச்ஷீர் பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக கூறப்படுவதால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT