Published : 06 Sep 2021 03:41 PM
Last Updated : 06 Sep 2021 03:41 PM
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். புதிய அரசு அமைப்பதில் தங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். தலைநகர் காபூலில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கான தலிபான்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினரில் புதிய அரசு எப்படி அமைய வேண்டும், அதில் யார் யார் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூறியதாவது:
ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை. கடுமையான மோதல் இருப்பதாக சிலர் கூறுவது தவறானது. கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. சில தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமே மீதமுள்ளன.
புதிய ஆப்கானிஸ்தான் அரசு எதிர்காலத்தில் மாற்றங்களை நோக்கி நடைபோடும். இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்படவுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் புதிய அரசு குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT