Published : 04 Sep 2021 03:41 PM
Last Updated : 04 Sep 2021 03:41 PM
எல்லைகளில் கெடுபிடி தொடரும்; நாம் நமது பாணியிலேயே கரோனாவை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசித் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் 70% பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாப்பு வளையத்துக்குள் வரும்வரையில் உலகம் பாதுகாப்பானதாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் டெல்டா வைரஸ்களுக்கு அஞ்சி மூன்றாவது டோஸ் திட்டத்தை அமல்படுத்திவிட்டன. ஆனால் இன்னமும் தடுப்பூசி திட்டத்தை முழு வீச்சில் மேற்கொள்வதைத் தவிர்த்து வருகிறது
வடகொரியா. நாட்டில் கரோனா இல்லை என வடகொரியா கூறுவதை நம்ப முடியவில்லை என உலக நாடுகள் பலவும் கூறுகின்றன.
அண்மையில், ஐ.நா., சபை தான் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வந்தது. ஆனால் இதனை வடகொரியா நிராகரித்துவிட்டது. சீனத் தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை வடகொரியா நிராகரித்துவிட்டது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவற்றை மடைமாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டது. அதேபோல் ஆஸ்ட்ராஜெனிகா மருந்தை வாங்குவதையும் தாமதப்படுத்தி வருகிறது.
ஒருவேளை வடகொரியா, சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் திறனை சந்தேகிக்கலாம், ஆஸ்ட்ராஜெனிகாவின் ரத்த உறைவு பக்கவிளைவைக் கண்டு அஞ்சலாம், ஆகையால் வேறு ஏதேனும் தடுப்பூசிக்குக் காத்திருக்கக்கூடும் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வியாழக்கிழமை அதிபர் கிம் தலைமையில் பொலிட்பீரோ கூட்டம் நடந்தது. அதில் பேசிய அதிபர் கிம், ''கரோனா நோய்த் தடுப்பில் நாம் இப்போது பின்பற்றி வரும் நடவடிக்கைகளில் சிறிதளவும் கூட தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்து தேசிய எல்லைகள் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கு கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். நாம் நமது பாணியிலேயே கரோனாவைக் கட்டுப்படுத்துவோம்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே எல்லைகளை மூடியுள்ளதால் வடகொரியா மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. இந்நிலையில் எல்லைகளை மூடி அதே நிலையைத் தொடருமாறு அதிபர் கிம் கூறியிருப்பது உலக நாடுகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.
ஒருவேளை வடகொரியா ஃபைஸர் தடுப்பூசியை விரும்பினால் அங்கு குளிர்பதனக் கிடங்குகளை பெருமளவில் ஏற்படுத்த வேண்டும். அதுவும் இப்போதைய சூழலில் வடகொரியாவுக்கு சவாலாகவே இருக்கும். ஆகையால் வடகொரியா நாம் நமது ஸ்டைலிலேயே கரோனாவை எதிர்கொள்வோம் மக்களை அறிவுறுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT