Published : 04 Sep 2021 12:29 PM
Last Updated : 04 Sep 2021 12:29 PM
ஆப்கன் முன்னாள் துணை அதிபரும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் போராளி குழு தலைவருமான அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்த நிலையில் ‘‘எங்கள் எதிர்ப்பு தொடர்கிறது, நான் என் மண்ணில் தான் இருக்கிறேன், என் மண்ணின் கெளரவத்தை காக்க தொடர்ந்து போராடுவேன்‘‘ என்று அம்ருல்லா சலே ட்வீட் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார்.
ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ஷிர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராட்டி வருகிறது.
தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன், புதிய போருக்கு தயாராக இருக்கிறேன் அம்ருல்லா சாலே தெரிவித்திருந்தார். அதன்படியே, பஞ்ஷிர் மாகாணத்தில் தற்போது தலிபான்களுக்கு எதிராக போராட்டி வருகிறார்.
இந்தநிலையில் பஞ்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அம்ருல்லா சலே தனது மண்ணிலேயே இருப்பதாகவும் எங்கும் தப்பியோடவில்லை என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘தலிபான்களுக்கு எதிரான எங்கள் எதிர்ப்பு தொடர்கிறது. நான் இங்கே என் மண்ணில் தான் இருக்கிறேன். என் மண்ணுக்காகவும் அதன் கெளரவத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன்’’ என என்று அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் அவர் கூறுகையில் ‘‘தலிபான்கள் பஞ்ஷிர் பகுதிக்கு பொருட்கள் வருவதை மனிதாபிமானமின்றி தடுத்துள்ளனர். இங்கு மக்கள் வருவதையும் தடுக்கிறார்கள். எங்கள் மண்ணில் ஆண்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர்.
தொலைபேசி, மின்சாரம் மற்றும் மருந்தை அனுமதிக்கவில்லை. மக்கள் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. தலிபான்கள் தொடர்ந்து போர் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT