Published : 03 Sep 2021 06:28 PM
Last Updated : 03 Sep 2021 06:28 PM
அமெரிக்காவைத் தாக்கிய ஐடா புயலால் பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐடா புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நியூயார்க் நகரில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். நியூ ஜெர்சியில் 23 பேர் பலியாகினர். பென்சில்வெனியாவில் 5 பேர் பலியானதாகத் தெரிகிறது.
ஐடா புயலால் மிகப்பெரிய மின் தொகுப்பு சேதமடைந்ததால் லூசியானா, மிசிஸிப்பி மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
புயல் பாதித்தப் பகுதி வாழ் மக்கள் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். மேலும் நாளை அவர் புயல் தாக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கிறார்.
இது குறித்து பைடன், கல்ஃப் கோஸ்டில் உள்ள மக்களுக்கு நான் இதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை நான் நேரில் வருகிறேன். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நியூஜெர்சி மேயர் பேட்டி:
ஐடா புயல் குறித்து நியூ ஜெர்சி மேயர் ஃபில்மர்ஃபி கூறுகையில், அடிக்கடி புயல் வருகின்றன. முன்பைவிட மிகுந்த வலிமையுடன் தாக்குகின்றன. பருவநிலை மாறுதல் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதேபோல் நியூயார்க்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சக் ஸ்கூமரும், பருவநிலை மாற்றம் விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு வாரத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகிறது என்றால் அது ஏதோ புயலுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய நிகழ்வு மட்டுமல்ல பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை. புவிவெப்பமயமாதலின் தாக்கத்தை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
90 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை:
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 90 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட கடுமையான புயல் ஐடா எனக் கூறப்படுகிறது. சமீப காலத்தில் கட்ரினா புயல் கோரமானதாக அறியப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ஐடாவின் பாதிப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. நியூயார்க் மத்திய பூங்காவில் ஒரே நாளில் 14.5 செமீ மழை பதிவானது. கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சுரங்கப்பாதைகள் மூழ்கிவிட்டன. மழை நீர் தேங்கியிருக்கும் சூழலில் மின்சாரமும் மீட்க முடியாமல் உள்ளது. ஜோ பைடன் அரசுக்கு இது மிகப்பெரிய இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் ஜெர்மனி, பெல்ஜியம், ப்ரூசல்ஸ், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT