Published : 03 Sep 2021 12:48 PM
Last Updated : 03 Sep 2021 12:48 PM
ஆப்கனில் தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா இத்தாலி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பெண்கள் மருத்துவமனைகளில் செவிலியராகவும், காவல்துறையிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அமைச்சரவையில் உதவியாளராக இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால், தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆப்கானிஸ்தானைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது” என்று சபிஹுல்லா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாகவே சீனாவின் முக்கிய அமைச்சர்களுடன் தலிபான்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுடனான (தலிபான்கள்) நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம் என்று சீனா சமீபத்தில் கூறியது.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT