Published : 31 Aug 2021 08:38 PM
Last Updated : 31 Aug 2021 08:38 PM
இனி சீனக் குழந்தைகள் வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும். புதிய நடைமுறையை நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் அமல்படுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
புதிய சட்டத்தின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களில் இதே நேரத்தில் விளையாடலாம். அதேபோல் புதிய விதியின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர் , விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாடு பதிவு செய்துகொள்ள முடியும்.
சீனா இதற்கு முன்னதாகவும் கூட வீடியோ கேம் விளையாட்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
2019ல், 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் இரவு 10 மணி தொடங்கி காலை 8 மணி வரை வீடியோ கேம் விளையாடக் கூடாது என்று கூறியிருந்தது. அதேபோல் வாரநாட்களில் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் மட்டுமே வீடியோ கேம் பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தது. 2018ல் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு புதிய வீடியோ கேம்களுக்குத் தடை விதித்திருந்தது. இதனால் சீனாவின் வீடியோ கேம் நிறுவனங்களான நெட்ஈஸ் , டென்சென்ட் (NetEase, Tencent) ஆகியன வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
டென்சென்ட்டின் ஹானர் ஆஃப் கிங்க்ஸ் விளையாட்டு சீனாவில் ரொம்பவே பிரபலம்.
அதேபோல், வீடியோகேம் விளையாடும் போது செலவழிக்கப்படும் தொகைக்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. மைனர் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப 28 டாலரிலிருந்து 57 டாலர் வரை மட்டுமே வீடியோ கேமிற்காக செலவழிக்க முடியும். சில விளையாட்டுகளை டவுன்லோட் செய்துவிட்டாலும் கூட அடுத்தடுத்த கட்டங்களை விளையாட சில டூல்களை வாங்குமாறும் அதற்கு குறிப்பிட்ட தொகையை செலவழிக்குமாறும் கேமிங் நிறுவனம் தெரிவிக்கும். இந்த செலவுக்குத்தான் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு உள்ள நிலையில் வரவேற்பும் எதிர்ப்பும் வழக்கம் போல் கிளம்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT