Published : 31 Aug 2021 01:50 PM
Last Updated : 31 Aug 2021 01:50 PM
தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மனிதநேய அடிப்படையில் உதவி தேவைப்படுகிறது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ படைகளுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த சண்டையிலும், துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இதில் மோசமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். இந்த ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 550 குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டிலும், குண்டுவீச்சிலும் பலியாகியுள்ளனர். 1400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர்.
தலிபான்கள் கொடுமையான ஆட்சிக்கு அஞ்சி ஆப்கன் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வேறு நாட்டுக்கு அகதிகளாகச் சென்று வருகின்றனர். போர், துப்பாக்கிச் சண்டை, வெடிகுண்டு வீச்சு எனத் தொடர்ந்து பதற்றத்துடனும், அமைதியற்ற சூழலும் நிலவுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சுகாதார உரிமைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் மட்டும் ஒரு கோடி குழந்தைகளுக்கு உடனடியாக மனிதநேய உதவிகள் தேவை என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெஃப் பிரதிநிதி ஹெர்வ் லுடோவிக் டி கூறியதாவது:
''ஆப்கானிஸ்தானில் தற்போதும் நிலவும் சிக்கலுக்குக் காரணமானவர்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை முதல் காபூல் நகரில் நடந்து வரும் சண்டையில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இன்றுகூட நாடு முழுவதும் குழந்தைகள் தொடர்பாக ஏராளமான மனவேதனைக்குரிய செய்திகளைக் கேட்டேன். குழந்தைகளுக்கான உரிமை ஒட்டுமொத்தமாக மீறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் தலிபான்கள் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டும் 550 குழந்தைகள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர். 1400க்கும் மேற்பட்ட குழந்தைகள், கை, கால்களை இழந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழப்பம், சிக்கல், சண்டை ஆகியவற்றால், குழந்தைகளுக்குக் குடிப்பதற்குக் கூட சுத்தமான நீர் இல்லை, கடும் வறட்சி நிலவுகிறது. குழந்தைகள் உயிர் காக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. குறிப்பாக போலியோ தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆப்கனில் வசிக்கும் குழந்தைகள் தங்களுக்கான அடிப்படை சுகாதார உரிமையும் பாதுகாக்கப்பட்ட குழந்தைப் பருவத்தையும் இழக்கின்றனர். சத்தான உணவுகள் இன்றி, பலவீனமான உடலுடன் மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்தபின் முதல் முறையாக உலக சுகாதார அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. 12.5 மெட்ரிக் டன் மருந்துகள் மசார் ஐ ஷெரீப் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.
2 லட்சம் மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைக்கான மருந்துகள், 350 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யவதற்கான மருந்துகள், ஆபத்தான நிலையில் இருக்கும் 6,500 பேருக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பொருட்கள் உடனடியாக ஆப்கனில் உள்ள 29 மாகாணங்களுக்கும், 40க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆப்கனில் இன்னும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக அடிப்படை சுகாதார உதவி தேவைப்படுகிறது. இது மிகவும் முக்கியமான தருணம் என்பதால், உலக நாடுகள் தங்கள் கவனத்தை ஆப்கன் மக்கள் பக்கத்திலிருந்து வேறுபக்கம் திருப்பிவிடக் கூடாது''.
இவ்வாறு ஹெர்வ் லுடோவிக் டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT