Published : 28 Aug 2021 08:30 AM
Last Updated : 28 Aug 2021 08:30 AM
ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்கா தாங்கள் குறிவைத்த இலக்கை கொன்றுவிட்டோம் என அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை நாங்க மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம்.
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவர்கள் நிச்சயமாக போற்றுதலுக்குரிய நாயகர்கள். அவர்களைக் கவுரவிக்கும் வகையில் வரும் 30 ஆம் தேதி வரை அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீட்புப் பணிகள் நடைபெறும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடங்கிவிட மாட்டோம். எங்களின் மீட்புப் பணி தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐஎஸ் ஐஎஸ் கோராசன் படைகள் மீது அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது
இது குறித்து மத்திய கமாண்டின் கேப்டன் பில் அர்பன், "ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். டார்கெட்டை முடித்துவிட்டோம். நிச்சயமாக இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.
இதற்கிடையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காபூல் விமான நிலையத்தில் மேலும் சில தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் அமைப்பினர்?
* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.
* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT