Published : 27 Aug 2021 04:08 PM
Last Updated : 27 Aug 2021 04:08 PM
தலிபான்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்தபின், காபூல் நகர மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வங்கியில் பணமிருந்து அதை எடுக்க ஏடிஎம் மையங்களில் பணமில்லை, வங்கிகள் பூட்டியே கிடப்பதால் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போராடி வருகின்றனர்.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
ஆப்கனில் நிலையற்ற சூழல் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதுவரை காபூலில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பற்ற நகராக காபூல் மாறி வருவதால், அங்குள்ள வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் செயலிழந்துள்ளன என்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளேடு தெரிவித்துள்ளது.
காபூலில் உள்ள வங்கிகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்று தலிபான்கள் தரப்பில் புதன்கிழமை உத்தரவிடப்பட்டும் வங்கிகள் திறக்கப்படவில்லை. வங்கிகள் எப்படியாவது திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் நாள்தோறும் காத்திருக்கிறார்கள்.
வங்கிகள் திறக்கப்படும், ஏடிஎம் மையங்கள் இயங்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாள்தோறும் மாலை வரை காத்திருந்தும் வங்கிகள் திறக்கப்படாததாலும், ஏடிஎம் மையங்கள் இயங்காததாலும் ஏமாற்றத்துடனே வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
காபூலைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மக்கள் கையில் பணமில்லை, ஒவ்வொருவரும் பணத்துக்காக வங்கி வாசலில் காத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹல்லாஹ் முஜாஹித் கூறுகையில், “ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது டாலர்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு கொண்டுசென்றால் அது பறிமுதல் செய்யப்படும். வங்கிகள் திறக்கப்படுவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும், அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும், மக்களின் கவலைகள் மாறும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவது காபூல் மக்களை ஆழ்ந்த கவலைக்கு இட்டுச் செல்கிறது. அரிசி மாவு, கோதுமை மாவு, போன்றவை சாமானிய மக்கள் வாங்க இயலாத அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாக காபூல் நகர மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
காபூல் நகர பொருளாதார வல்லுநர் முகமது தாவூத் நியாஸ் கூறுகையில், “ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் எவ்வாறு நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் எதிர்காலம் அமையும். நிச்சயமற்ற சூழல் பொருளாதாரத்தைச் சரிவுக்குக் கொண்டுசெல்லும். இன்னும் அதிகமான மக்கள் வறுமைக்குச் செல்வார்கள். அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம், அனைத்தையும் மாற்றியுள்ளது. வர்த்தகம், வியாபாரம், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் மாறியுள்ளன. மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே சென்றால் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT