Published : 27 Aug 2021 02:52 PM
Last Updated : 27 Aug 2021 02:52 PM
ஐஎஸ்ஐஎஸ் உடனான தங்கள் தொடர்பை தலிபான்கள் மறுக்கலாம், ஆனால் ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பின் சிலிப்பர் செல்கள் தலிபான்கள் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுவுடன் தொடர்பில் இருப்பதை காட்டும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறியுள்ளார்.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
ஆப்கனில் நிலையற்ற சூழல் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதுவரை காபூலில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை தலிபான் தீவிரவாத அமைப்பும் கண்டித்துள்ளது. இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே இதனை மறுத்துள்ளார். குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தலிபான்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
‘‘எஜமானரிடமிருந்து தலிபான்கள் நன்றாகக் கற்றுக்கொண்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் உடனான தங்கள் தொடர்பை தலிபான்கள் மறுக்கலாம். இது குவெட்டா ஷூரா மீதான பாகிஸ்தானின் மறுப்பைப் போன்றது. எங்களிடம் உள்ள ஒவ்வொரு ஆதாரமும் ஐஎஸ்-கே சிலிப்பர் செல்கள் தலிபான்கள் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுவுடன் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது"
எனக் கூறியுள்ளார்.
ஆப்கனின் பஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார்.
சலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். ஆப்கானிஸ்தானில் 2004ல் ஜனநாயக ஆட்சி மலர்ந்த போது நாட்டின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைமைப் பதவியை அவருக்குப் பெற்றுத்தந்தது. என்டிஎஸ் தலைவராக சலே, பாஷ்தோ மொழி பேசும் உளவாளிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இது அமெரிக்கப் படைகள் தலிபான் தலைவர்களைக் கண்டறிய பேருதவியாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் படைகளுக்கு ஆதரவு அளிப்பதை அவர்தான் உறுதி செய்தார். 2010ல் அவர் பதவி பறிபோனது. பின்னர் 2018ல் அவர் அஷ்ரப் கனியுடன் சமரசம் பேசி உள்துறை அமைச்சரானார். பின்னர் துணை அதிபர் பதவிக்கு உயர்ந்தார். சலேவை கொலை செய்ய தலிபான்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT