Published : 27 Aug 2021 12:53 PM
Last Updated : 27 Aug 2021 12:53 PM
காபூல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது. பல்வேறு நாட்டு விமானங்களும் அடுத்தடுத்து தங்கள் நாட்டு மக்களை அழைத்து வரும் பணியை தொடங்கியுள்ளன.
ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கனில் விரைவில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் என அறிவித்துள்ளனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
நிலையற்ற சூழல் ஆப்கனில் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர்.
ஆப்கனில் சிக்கியிருக்கும் பல்வேறு நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் வெளிேயற்றி வருகின்றன. ஆப்கனில் தங்கியுள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, ஆப்கன் நாட்டைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்களையும் மத்திய அரசு பாதுகாப்புடன் இந்தியா அழைத்து வருகிறது.
இந்தநிலையில் காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆப்கனில் தங்கியுள்ள வெளிநாட்டினரை வேகமாக வெளியேற்ற வேண்டிய தேவையிருப்பதால் அடுத்தடுத்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம் காபூல் விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அமெரிக்கா அதிகரித்துள்ளது. கூடுதல் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT