Published : 26 Aug 2021 10:13 PM
Last Updated : 26 Aug 2021 10:13 PM
பெண்களை மதிக்க இன்னும் எங்கள் வீரர்கள் தயார்படுத்தப்படவில்லை. ஆகையால் சிறிதுகாலம் அவர்கள் வீட்டிலேயே இருப்பது நலம். மீறி வெளியே வர நேர்ந்தால் ஆண் துணையுடன் வரலாம் என்று தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்.
1996ல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் இருந்தது. அப்போது பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதியில்லை. காய்கறி சந்தை உள்ளிட்ட மிகக்குறைவான இடங்களுக்கு மட்டுமா அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதைத்தாண்டி வெளியே வரும் பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி (ஆகஸ்ட் 15) ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைந்தது. அப்போது, இந்த முறை தலிபான்கள் ஆட்சி விதியாசமாக இருக்கும். பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். கல்வி கற்க அனுமதிக்கப்படுவர். ஆனால், இவையெல்லாம் இஸ்லாம் சட்டத்தின் கீழ் நடக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால், அங்கே நடக்கும் சில சம்பவங்கள் அதற்கு ஏற்றாற் போல் அமையவில்லை. மேலும், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா, நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையவில்லை.
ஜபிபுல்லா அளித்த பேட்டியில், "இன்னும் சில காலமாவது பெண்கள் வீட்டிலேயே இருப்பது நலம். ஏனெனில் எங்களின் வீரர்கள் பெண்களை மதிக்கப் பயிற்றுவிக்கப்படவில்லை. இப்போது ராணுவக் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது. இன்னும் இங்கு முறையான ஆட்சி அமையவில்லை. அதுவரை பெண்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம். அவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே கொண்டுவந்து சேர்க்கப்படும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் வரை ஆப்கனில் இருந்த ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆலோசகர் பிரெயின் காஸ்டனர் தலிபான்கள் பெண்களை மாண்புடன் நடத்த உண்மையிலேயே விரும்பினால் அவர்கள் தங்களின் வீரர்களுக்கு முறையாக பயிற்சியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் காபூலில் தலிபான் படையினர் சற்று மென்மையான போக்கைக் கடைபிடிப்பதால் அங்கு ஒருசில பெண்கள் சாதாரண உடையில் வெளியே வருகின்றனர். ஆனால், அதுவே மற்ற பகுதிகளில் பெண்கள் அதிகம் வெளிவருவதைத் தவிர்த்து வருகின்றனர். அப்படியே வந்தாலும் ஹிஜாப் அனிந்தோ அல்லது முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்தோ தான் வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT