Published : 23 Aug 2021 01:00 PM
Last Updated : 23 Aug 2021 01:00 PM
தலிபான்களை நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, நான் யாரையும் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்தார்.
தலிபான்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
அதில் ஜோ பைடன் கூறும்போது, “தலிபான்கள் இதுவரை அமெரிக்க வீரர்களைத் தாக்கவில்லை. அவர்கள் நாடு விட்டு நாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தலிபான்கள் சொன்னதைச் செய்கிறார்களா என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய நிலையில் நாம் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லவில்லை என்றால் எப்போது செல்வோம். இப்போது ஆப்கனை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் எப்போது புறப்படுவோம்? இன்னும் 10 ஆண்டுகள்? இன்னும் 5 ஆண்டுகள்? நான் எதிர்காலத்தில் உங்கள் மகன், மகளை ஆப்கனுக்கு சண்டைக்குச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை” என்றார்.
அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் நீங்கள் தலிபான்களை நம்புகிறீர்களா என்று கேள்விக்கு, ''நான் யாரையும் நம்பவில்லை'' என்று பைடன் தெரிவித்தார்.
பின்னணி:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதிய அரசில் ஹமீத் கர்சாயை இணையவைக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT