Published : 23 Aug 2021 11:51 AM
Last Updated : 23 Aug 2021 11:51 AM
ஆப்கானிஸ்தான் குடிமக்கள் போர்வையில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதின் செய்தி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கூறும்போது, ''தெற்காசிய நாடுகளில் ஆப்கனிலிருந்து மக்கள் அகதிகளாக நுழைவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் இருக்கலாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. விசா இல்லாமல் அவர்களை நாட்டிற்கு அனுமதிக்க நான் விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதைப் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், ரஷ்யா தலிபான்களைப் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறும்போது, “தலிபான்கள் இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதியில் உறுதியாக நின்றுள்ளனர். அவர்கள் அறிவித்த போர் நிறுத்தம், அனைவருக்கும் பொது மன்னிப்பு, பேச்சுவார்த்தைகள் இவற்றை எல்லாம் அவர்கள் செயல்படுத்தி வருவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதிய அரசில் ஹமீத் கர்சாயை இணையவைக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT