Published : 21 Aug 2021 11:52 AM
Last Updated : 21 Aug 2021 11:52 AM
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்திடம் அளிக்கப்பட்ட குழந்தை பத்திரமாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். இதில் ஒரு அங்கமாக, காபூல் விமான நிலையத்தில் திரண்ட மக்கள் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது மனதையும் கலங்கச் செய்தது.
இந்த நிலையில் நாடு திரும்பும் அமெரிக்க வீரர்களிடம் ஒரு குழந்தையை ஆப்கன் மக்கள் சுவர் தாண்டிக் கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. யார் அந்தக் குழந்தை? அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? என்று அனைவரும் கேள்வி எழுப்பினர்.
தற்போது அக்குழந்தை பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து அமெரிக்கக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜேம்ஸ், “வீடியோவில் காணப்பட்ட குழந்தை அந்த இடத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ நிபுணர்களால் பராமரிக்கப்பட்டது. குழந்தை தற்போது தந்தையுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT