Published : 21 Aug 2021 11:09 AM
Last Updated : 21 Aug 2021 11:09 AM
தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்யப்படும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசு வீழ்த்தப்பட்டு அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அங்கு விரைவில் என்னமாதிரியான அரசு அமைக்கப்படும் என்பதைத் தெரிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிச்சயமாக ஜனநாயக ஆட்சி இருக்காது ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆப்கன் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் புக மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள்" என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT