Published : 21 Aug 2021 09:49 AM
Last Updated : 21 Aug 2021 09:49 AM

ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது: சீனா கவலை

ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது என சீனா கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அந்நாடு மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது என சீனா கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கடந்த வாரம் தலிபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே மட்டும் இந்துகுஷ் மலைப்பகுதிக்கு சென்றுவிட்டார். அவர் தானே அதிபர் என்றும் தலிபான்களுக்கு தலைவணங்க மாட்டோம் என்றும் கூறிக்கொண்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை சீனா உற்று கவனித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷான் முகமதுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய அண்டைநாட்டவர் என்ற முறையில், ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை பொறுப்புணர்வுடன் நாம் உறுதி செய்ய வேண்டும். ஆப்கன் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் அமைய சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியை உருவாக்க நாம் துணையாக இருக்க வேண்டும். ஆப்கன் அரசியல் சாசனத்தின் வழியில் ஆப்கன் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆப்கானிஸ்தானின் இப்போதைய தேவை அரசியல் ரீதியான அமைதி. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் அங்கு இன்னமும் ரத்தக்களரியோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதே அங்கு நீடித்த நிலையான ஆட்சிக்கான காலம்வந்துவிட்டது என்று அர்த்தம். மக்களின் வாழ்க்கையும் மெல்லமெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகள் கூடும் கூடாரமாக மாறிவிடக் கூடாது.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

சீனாவின் அக்கறை:

ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் குறித்து சீனா மிகுந்த அக்கறை காட்டிவருகிறது. ஆப்கனில், இனி இஸ்லாமிய சட்டப்படியே ஆட்சி நடக்கும், ஆப்கானிஸ்தான் இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் (Islamic Emirates of Afghanistan) என்றழைக்கப்படும் என தலிபான்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மொழிவாரியான குழுக்களையும் உள்ளடக்கிய ஆட்சியே அமைய வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம், தலிபான்களின் உயர்மட்டக் குழு ஒன்று அரசியல் பிரிவு தலைவர் அப்துல் கானி பரதார் சீனா சென்றார். அப்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் உய்குர் முஸ்லிம்கள் ஆப்கனில் இருந்து செயல்பட அனுமதிக்கமாட்டார்கள் என்று உறுதியளித்துச் சென்றார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு பயங்கரவாத குழுக்களும் படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் சீனா ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x