Published : 20 Aug 2021 12:38 PM
Last Updated : 20 Aug 2021 12:38 PM
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின், பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துச் செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிக்கின்றனர்.
ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
அதன்பின் தலிபான்கள் சார்பில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ கடந்த 1995ம் ஆண்டு ஆட்சியின்போது இருந்த நிலை இருக்காது. பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும். பணிக்குச் செல்லவும், கல்வி கற்கவும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பெண் பத்திரிகையாளர்களை பணிக்குச் செல்லவிடாமல் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரேடியோ டெலிவிஷன் ஆப்கானிஸ்தான் (ஆர்டிஏ) சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் ஷப்னம் கான் டாவ்ரன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ ஷரியத் சட்டப்படி செயல்படுவோம் என தலிபான்கள் தெரிவித்தார்கள்.
ஆனால், பெண்களின் உரிமையை அவர்கள் மதிக்கவில்லை. நான் பணியாற்றும் சேனல் அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் தலிபான்கள் தடுக்கிறார்கள். நான் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால் தலிபான்கள் அனுமதிக்கவில்லை. ஆட்சி மாறிவிட்டது, இனிமேல் நீங்கள் பணியாற்ற முடியாது என்று தலிபான்கள் என்னிடம் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதிஜா அளித்தபேட்டியில் “ நான் பணிக்குச் செல்வதையும் தலிபான்கள் தடை செய்துள்ளனர். நான் வழக்கம் போல் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், வாயிலில் இருந்த தலிபான்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய இயக்குநரிடம் நான் மட்டுமல்ல என்னுடன் சேர்ந்த மற்ற பெண் பத்திரிகையாளர்களுடம் பேசியிருக்கிறோம்.
நாங்கள் தொடர்ந்து பணியில் இருப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தலிபான்கள் தெரிவித்தனர். சேனலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெண் தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்கள் இல்லாத நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT