Last Updated : 20 Aug, 2021 10:09 AM

 

Published : 20 Aug 2021 10:09 AM
Last Updated : 20 Aug 2021 10:09 AM

மக்களே ஆப்கனை விட்டுச் செல்லாதீர்கள்; இமாம்களிடம் தலிபான் வேண்டுகோள்: விமான நிலையம் வந்தால் அடி, உதை

படம்: ஏஎன்ஐ.

காபூல்

ஆப்கானிஸ்தான் மக்கள் யாரும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துங்கள் என்று முஸ்லிம் இமாம்களிடம் தலிபான்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று சிறப்புத் தொழுகை மசூதிகளில் நடைபெறும்போது, அங்கு வரும் மக்களிடம் நாட்டை விட்டுச் செல்ல வேண்டாம் என இமாம்கள் அறிவுறுத்த வேண்டும் என தலிபான்கள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான்கள் விரைவாக நாட்டின் பல்வேறு மாகாணங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதுமட்டுமல்லாமல் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றியவுடன் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டுத் தப்பி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிவிட்டோம், விரைவில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் என அறிவித்துள்ளனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

நிலையற்ற சூழல் ஆப்கனில் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர்.

இந்நிலையில் ஆப்கனை விட்டுச் செல்லும் மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை நாட்டை விட்டுச் செல்லவேண்டாம் எனக் கேட்கக் கோரி முஸ்லிம் மதகுரு, இமாம்களிடம் தலிபான்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் தரப்பில் கடந்த முறை போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள், வேலைக்குச் செல்வது, கல்வி கற்பது போன்ற உரிமைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தலிபான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் அடக்குமுறையிலும், அட்டூழியங்களிலும் ஈடுபடலாம் என்பதால் மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் நாட்டை விட்டுச் செல்லும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா சார்பில் ஆப்கனைச் சேர்ந்த 7 ஆயிரம் பேரை அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இந்தச் சூழலில் காபூல் விமான நிலையத்துக்கு உரிய ஆவணங்களுடன் வேறு நாட்டுக்குப் பயணிக்க வரும் மக்களையும் தலிபான்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். அவ்வாறு சண்டையிடும், வாக்குவாதம் செய்யும் மக்களை ஏ.கே.47 துப்பாக்கியால் தாக்குகின்றனர்.

ரேடியா நியூஸிலாந்துக்கு ஆப்கனைச் சேர்ந்தவர் அளித்த பேட்டியில், “உரிய ஆவணங்கள், விசாவுடன் வேறு நாட்டுக்குச் செல்வதற்கு காபூல் விமான நிலையம் வந்தாலும் தலிபான்கள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு வரும் மக்களை ஏ.கே.47 துப்பாக்கிகள் மூலம் தாக்குகிறார்கள். வானத்தை நோக்கி சுட்டு மக்களை அச்சுறுத்தி, தாக்கி அனுப்புகிறார்கள்.

ஒவ்வொருவரும் அந்நாட்டை விட்டு வெளியேறவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளை விட மோசமாகிக் கொண்டே வருகிறது. எங்களைப் பாதுகாக்கிறோம். ஆனால், குடும்பத்தாரைப் பாதுகாக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x