Published : 18 Aug 2021 08:35 PM
Last Updated : 18 Aug 2021 08:35 PM
ஆப்கனின் அடுத்த அரிபராக முல்லா அப்துல் கனி பரதார் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த முல்லா பரதார்?
இவர் தலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமயகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இவர் தலிபான் நிறுவனம் முல்லா முகமது ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018ல் அவர் விடுவிக்கப்பட்டார். ட்ரம்ப் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பகத்தன்மை நிறைந்த முகமாகக் கருதியது.
முல்லா பரதார் அவருடைய பல்வேறு தாக்குதல்களால் அறியப்பட்டாலும் கூட 2004, 2009 எனத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லா பரதார் இன்று ஆப்கன் வந்தபோது தலிபான்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், மக்கள் இதை எப்படி வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை.
தலிபான்களின் 6 முக்கிய முகங்கள்:
1980களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது. இந்த பனிப்போரில் குளிர்காய நினைத்த அமெரிக்கா சோவியத்துக்கு எதிரான முஜாஹிதீன் படைக்குள் சில பிரச்சினைகளை உண்டாக்கியது. அதிலிருந்து விலகிய சில உறுப்பினர்களுடன் 1994ல் தலிபான் படைகள் உருவாகின. 1996ல் அதன் கை மேலோங்கியது. நாட்டில் தீவிரமாக இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை விதித்தது தலிபான் படைகள். மேலும் மத சிறுபான்மையினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமர். 2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் தலிபான் படைகள்ளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்தது. அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாமல் அதன் அப்போதைய தலைவர் முல்லா முகமது ஒமர் தலைமறைவானார். 2013 ஆம் ஆண்டுவரை முல்லாவின் நிலவரம் என்னவென்பது மிகப்பெரிய ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. 2015ல் முல்லாவின் மரணத்தை அவரது மகன் உறுதி செய்தார்.
இப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்தப் படையில் ஹைபத்துல்லா அகுன்சதா, முல்லா முகமது யாகூப், சிராஜுதீன் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பரதார், ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், அப்துல் ஹகீம் ஹக்கானி ஆகிய 6 பேரும் மிக முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT