Published : 18 Aug 2021 06:47 PM
Last Updated : 18 Aug 2021 06:47 PM
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் ஸ்பின் போல்டக் / சமான் எல்லைப் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் நுழைந்து வருகின்றனர். ஆப்கான் குடிமக்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றனர்”
ஆப்கனிலிருந்து அகதியாக பாகிஸ்தானுக்குச் சென்ற அப்துல்லா கூறும்போது, “ ஐந்து நாட்களுக்கு மிகுந்த வன்முறை நிலவியது. தலிபான்களும், ஆப்கான் படைகளும் கடுமையாக சண்டை போட்டனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்” என்றார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கான் அதிபராக தலிபான்களின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் அந்நாட்டின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT