Published : 18 Aug 2021 05:39 PM
Last Updated : 18 Aug 2021 05:39 PM

மற்ற நாடுகளைப் போல் ஆப்கன் வளர்ச்சி காண உதவுங்கள்: தலிபான்களுக்கு மாணவி கோரிக்கை- ஹெராத்தில் பள்ளிகள் திறப்பு

மற்ற நாடுகளைப் போல் ஆப்கன் வளர்ச்சி காண உதவுங்கள் என தலிபான்களுக்கு பள்ளி மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்க மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருகின்றனர்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட நிலையில், அங்கு பெண்கள், சிறுமிகள் நிலை என்னவாகும் என்று சர்வதேச சமூகம் கவலை தெரிவித்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இந்தமுறை உலகிற்குத் தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தலிபான் தீவிரவாத அமைப்பின் நீண்டகால செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் நேற்று முதல்முறையாக தனியார் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாமிய சட்டப்படி வழங்க தலிபான்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.

உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அ ரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்று அவர் பேசினார்.

இந்நிலையில், நேற்றும், இன்றும் ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் பெண்களைக் கல்வி நிலையங்களில் பார்க்க முடிந்தது.
பள்ளிக்கு வந்த மாணவி ரோக்கியா கூறுகையில், மற்ற நாடுகளைப் போல் ஆப்கனிலும் வளர்ச்சி தேவை. தலிபான்கள் பாதுகாப்பான ஆட்சி வழங்குவார்கள் என நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குப் போர் தேவையில்லை. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றார்.

ஹெராத் நகர் ஈரான் எல்லையை ஒட்டி உள்ளது. இது எப்போதுமே ஆப்கனின் மற்ற மாகாணங்களைப் போல் இல்லாமல் சற்று புதுமையானதாகவே இருந்துள்ளது. கவிதைக்கும், கலைகளுக்கும் பெயர் பெற்ற நகரம் இது. இந்த நகரத்தில் எப்போதுமே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. 1990களில் தலிபான் ஆட்சியின்போது மட்டுமே அதற்கு ஆபத்து வந்தது.

இந்நிலையில் மீண்டும் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஹெராத்தில் இன்று பெண் பிள்ளைகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
ஹெராத்தில் உள்ள பள்ளிக்கூட முதல்வர் பசீரா பசீரத்கா கூறுகையில், பள்ளிகளை திறக்க தலிபான்கள் அனுமதித்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். தேர்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x