Last Updated : 18 Aug, 2021 08:18 AM

13  

Published : 18 Aug 2021 08:18 AM
Last Updated : 18 Aug 2021 08:18 AM

இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும்: தலிபான்கள் உறுதி

தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் | படம் உதவி ஏஎன்ஐ

காபூல்


இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், கல்வி கற்கலாம், வேலைக்குச் செல்லலாம். அமெரிக்க,மேற்கத்தியப் படைகளுடன் இணைந்து எங்களை எதிர்த்த மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என தலிபான் தீவிரவாத அமைப்பின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார்.

காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள்மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

அதுபோன்று இந்தமுறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும் என உலகச் சமுதாயம் அஞ்சி வருகிறது. இதன் காரணமாகவே கொடூரமான தலிபான்கள் ஆட்சியில் வாழ்வதைவிட வேறு எங்காவது செல்லலாம் என அஞ்சி மக்கள்கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.

ஆனால், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இந்தமுறை உலகிற்குத் தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தலிபான் தீவிரவாத அமைப்பின் நீண்டகால செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் நேற்று முதல்முறையாக தனியார் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

தலிபான்கள் ஆட்சியில் சித்தாந்தங்கள்,நம்பிக்கைகள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் ஏனென்றால் தலிபான்கள் முஸ்லி்ம்கள். ஆனால், கடந்த முறையைவிட இந்த முறையில் தலிபான்களுக்கு ஏாளமான அனுபவங்கள் கிடைத்துள்ளன.அந்த அனுபவத்தால் அவர்கள் கண்ணோட்டம் மாறும்

பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாமிய சட்டப்படி வழங்க தலிபான்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியேசெல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.

உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அ ரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை மற்றநாடுகளை தாக்குவதற்கு பயன்படும் தளமாக இனிமேல் யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த படைகளும் வந்தபோது, அவர்களுக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு முழுமையான பொதுமன்னிப்பு வழங்குகிறோம்.

அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கன் மக்களைத் தேடிச் சென்று ஏன் உதவினீர்கள் என்று கேட்கவும்மாட்டோம். ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செயல்படத் தடையில்லை. ஆனால், ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டு்ம், பத்திரிகையாளர்கள் தேசத்தின் மதிப்புகளுக்குவிரோதமாகச் செயல்படக்கூடாது.

கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பும் இல்லை. ஆனால், தலிபான்கள் வந்தபின், மீண்டும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் , சர்வதேச அமைப்புகள், உதவும் அமைப்புகள் முக்கியமானவை, அவற்றின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.

தலிபான்களின் துணைத் தலைவரும், நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தானுக்கு வந்துவிட்டார்

இ்வ்வாறு ஜபிபுல்லாஹ் முஜாஹித் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x