Published : 17 Aug 2021 04:41 PM
Last Updated : 17 Aug 2021 04:41 PM

தலைவணங்க மாட்டோம்; புதிய போருக்கு தயார்: தலிபான்களுக்கு எதிராக ஆப்கனில் முதல் கொரில்லா படை குரல்

தலிபான்களிடம் சரணடையமாட்டேன். அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம் என்று ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டரில்,''நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கும் எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன். என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் இந்துகுஷ் மலைகளின் ஊடே உள்ள பாஞ்ஷிர் பகுதியில் தலிபான் எதிர்ப்புத் தலைவர் அகமது ஷா மசூத்துடன், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் இன்று அவர் இத்தகைய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி வெற்றிக் களிப்பில் இருக்கும் சூழலில் அவர்களுக்கு எதிராக முதல் கொரில்லா இயக்கக் குரல் ஓங்கியிருக்கிறது.

போராளிகளின் கோட்டையான பாஞ்ஷிர்:

பாஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். சலேன் அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். 1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். 1996 சம்பவம் தலிபான் மீதான தனது பார்வையை மாற்றியமைத்ததாக அவர் ஒரு முறை கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை:

2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் தலிபான்களை அமெரிக்கா வேட்டையாட நினைத்தபோது சிஐஏவின் செல்லப்பிள்ளையாக சாலே விளங்கினார். இந்த உறவு தான் ஆப்கானிஸ்தானில் 2004ல் ஜனநாயக ஆட்சி மலர்ந்த போது நாட்டின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைமைப் பதவியை அவருக்குப் பெற்றுத்தந்தது. என்டிஎஸ் தலைவராக சாலே, பாஷ்தோ மொழி பேசும் உளவாளிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இது அமெரிக்கப் படைகள் தலிபான் தலைவர்களைக் கண்டறிய பேருதவியாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் படைகளுக்கு ஆதரவு அளிப்பதை அவர்தான் உறுதி செய்தார். 2010ல் அவர் பதவி பறிபோனது. பின்னர் 2018ல் அவர் அஷ்ரப் கனியுடன் சமரசம் பேசி உள்துறை அமைச்சரானார். பின்னர் துணை அதிபர் பதவிக்கு உயர்ந்தார். சாலேவை கொலை செய்ய தலிபான்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் அவர் வரும் பாதையில் தலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டனர். சாலே கதை முடிந்தது என தலிபான்கள் நினைத்திருக்க அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் வீடியோவில் தோன்றி ''தலிபான் எதிர்ப்புப் போராட்டம் தொடரும்'' என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x