Published : 17 Aug 2021 03:48 PM
Last Updated : 17 Aug 2021 03:48 PM

பொதுமன்னிப்பை அறிவித்த தலிபான்கள்; பெண்களும் ஆட்சியில் பங்கேற்க அனுமதி: தணியுமா பதற்றம்?

ஆப்கானிஸ்தானை வசப்படுத்திய தலிபான்கள் தற்போது நாடு முழுவதுக்கும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளார்கள். மேலும், பெண்களும் புதிய ஆட்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்.

தலிபான்களின் ஆட்சி அமையவிருப்பதால் அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்பட்டனர். காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு குழப்பமான சூழல் உருவானது. இதனால் காபூல் விமானநிலையம் நேற்று மூடப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் காபூல் விமானநிலையம் மீண்டும் விமானங்கள் வந்துசெல்லும் வகையில் பயன்பாட்டுக்கு வருவதாக அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் தத்தம் நாட்டின் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினருடன் சில பொதுமக்களையும் ஏற்றிக் கொண்டு ஆப்கனிலிருந்து பறந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவது மக்கள் குழப்பமான மனநிலையில் இருப்பதால் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தலிபான்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது நாட்டு மக்கள் அனைவருக்குமே பொது மன்னிப்பு அளிப்பதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இது குறித்து தலிபான் தலைவர் ஒருவர் அல்ஜசீராவுக்கு அளித்தப் பேட்டியில், என்ன மாதிரியான கட்டமைப்புடன் ஆட்சி அமைக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், முழுக்க முழுக்க இஸ்லாமியத் தலைமையின் கீழ் ஆட்சி அமையும். அமைதியை நிலைநாட்ட அனைவருக்கும்

பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. புதிய ஆட்சியில் பெண்களுக்கும் இடமிருக்கும் என்று கூறியுள்ளார். அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள் தத்தம் பணிகளுக்குத் தயக்கமின்றி திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது. இதனால், ஆப்கன் சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் சிலரை பணியில் காண முடிந்தது. ரஷ்ய தூதர் பேச்சுவார்த்தைக்கு வரவுள்ள நிலையில் அங்கு இயல்பு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவரிடம் ஆப்கன் தொலைக்காட்சியின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பேட்டி கண்டுள்ளார். இது அங்கு பெண்களுக்கான நல்லதொரு சமிக்ஞையாகக் காணப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் தலிபான்கள் அமைதியான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவின் திடீர் நட்பு:

1996ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிபோது அதனை அங்கீகரிக்க மறுத்த சீனா, இப்போது 2001ல் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து முதல் குரலைப் பதிவு செய்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தலிபான்கள் பிரதிநிதிகளை டியான்ஜின் வடக்கு துறைமுகத்துக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் சர்ச்சையில் சீனா வெகுகாலமாக சிக்கியிருப்பதால், தலிபான்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்தால் உய்குர் முஸ்லிம்கள் சர்ச்சையை சமாளிக்க முடியும் என சீனா நம்புவதாலேயே இந்த திடீர் நட்புறவு எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x