Published : 17 Aug 2021 03:01 PM
Last Updated : 17 Aug 2021 03:01 PM

படைகளை முன்கூட்டியே திரும்பப் பெற்றது அமெரிக்காவின் தவறான கணக்கீடு: ஐரோப்பிய நாடுகள் விமர்சனம்

ஆப்கனில் படைகளை முன்னரே திரும்பப் பெற்றது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு என்று ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுக் குழுவின் தலைவர் நோர்பர்ட் ரோட்ஜென் கூறும்போது, “நான் இதை கனத்த இதயத்துடனும், என்ன நடக்கிறது என்ற திகிலுடனும் சொல்கிறேன். முன்கூட்டியே படைகளைத் திரும்பப் பெறுவது என்பது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு. இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் மற்றும் நம்பகத்தன்மையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவநம்பிக்கையின்மை மற்றும் துரோகத்தை உணரச் செய்யும்” என்றார்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இவை கசப்பான நிகழ்வுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x