Published : 17 Aug 2021 02:40 PM
Last Updated : 17 Aug 2021 02:40 PM
உயிர்பிழைக்க வேண்டி உடைமைகளை எல்லாம் சொந்த மண்ணில் விட்டுவிட்டு குடும்பம், குழந்தைகளுடன் ஒரே விமானத்தில் ஆப்கனைச் சேர்ந்த 640 பேர் நெருக்கத்தில் அமர்ந்து பயணித்த புகைப்படம் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அந்நாட்டு அதிபரே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்.
தலைமை இல்லை, தலிபான்களின் ஆட்சியோ அச்சுறுத்தலைத் தவற வேறு ஏதும் தருவதாக இருக்காது என்பதில் அந்நாட்டு மக்களுக்கு ஐயமில்லை. வேறு வழியில்லாமல், உயிர் மட்டும் பிழைத்தால் போதுமென்ற காபூல் விமான நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
அவ்வாறு திரண்ட மக்கள் அனைவருமே ஏதாவது ஒரு விமானத்தில் எப்படியாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்தனர். மீட்புப் பணிக்காக வந்த அமெரிக்க விமானப்படையின் சி17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 640 பேர் ஏற்றிக் கொள்ளப்பட்டனர்.
உயிர்பிழைக்க வேண்டி உடைமைகளை எல்லாம் சொந்த மண்ணில் விட்டுவிட்டு குடும்பம், குழந்தைகளுடன் ஒரே விமானத்தில் ஆப்கனைச் சேர்ந்த 640 பேர் நெருக்கத்தில் அமர்ந்து பயணித்த அந்தப் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 640 பேர் மீட்பு விமானத்தில் தரையில் அமர்ந்திருக்க, அவர்களிடம் எந்த உடைமைகளும் இல்லை. அத்தனை முகங்களும் ஏதோ அச்சத்தில் மட்டுமே இருப்பதை அந்த புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மக்கள் மனநிலை என்னவென்பதை இந்தப் புகைப்படம் ஆவணப் படுத்தியிருக்கிறது. 640 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அமெரிக்க விமானம் கத்தார் நாட்டிற்குச் சென்றது. அங்கே ஆப்கன் மக்கள் 640 பேரும் இறக்கிவிடப்பட்டனர்.
இனி அவர்கள் புதிதாக ஓர் வாழ்விடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
முன்னதாக நேற்று (திங்கள் கிழமை) முழுவதுமே காபூல் விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம், விமானத்தில் ஃபுட்போர்டு அடித்தாவது தப்பிக்க முயன்ற மக்களின் பதற்றம், துப்பாக்கிச் சூடு, உயிர்ப்பலி ஆகியன மட்டும் தான் சர்வதேச கவன ஈர்ப்பு செய்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT